புதன், பிப்ரவரி 04, 2015

தானமநாட்டு அம்பலகாரர்

தானம நாட்டு அம்பலகாரர்....! (வரலாற்றின் வழியே சிறு தேடல்)


தானம நாடு...

              இன்றைய புதுகை,தஞ்சை மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் அமைந்துள்ள சமதளப் பரப்பு.முன்னொரு காலத்திலும் அப்படித்தான் இருந்தது சோழ,பாண்டிய நாடுகளின் எல்லைக் கோடாகவும், அவ்விரு நாடுகளுக்குமிடையே கடும் போர் நடைபெறுகின்ற காலகட்டத்தில் இரு நாட்டுப் படை வீரர்களும் மோதிக் கொள்ளும் களமாகவும். அப்படி ஆயிரம் ஆயிரம் போர் மறவர்கள் சிந்திய இரத்ததால்தானோ என்னவோ...இன்றளவும் இப்பரப்பின் மணல்கள் இரத்தச் சிவப்போடு செம்மண்ணாகவே காட்சியளிக்கின்றது!

விசயாலயச் சோழரும் அவருக்குப் பின்னர் அரியனை ஏறியோருமான "பிற்காலச் சோழர்கள்" சோழ நாட்டை பன்னிரு நாடுகளாக பிரித்தாண்டனர்.அப்படிப் பிரிக்கப்பட்ட பன்னிரு நாடுகளின் ஒன்றான இராஜராஜ சோழ வளநாட்டின் ஒரு பகுதியே இன்றையத் தானமநாடு.வெள்ளாற்றின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள இப்பரப்புகள் தானவ(ம) நாடு என்று பெயர் பெற்றது முதலாம் இராசேந்திரச் சோழனின் காலத்தில்தான். ஆனாலும் அதற்கு முன்னரே இப்பரப்புகள் இப்பகுதியில் வாழ்ந்த 'அரையர்' என்போரால் ஆளப்பட்டதற்கான சான்றுகள் கல்வெட்டுக்களாகவும்,செப்புப் பட்டயங்களகவும் ஏராளம் உண்டு.ஆனாலும் 'தானவர் எனும் பட்டம் பெற்ற அரையர்' இப்பரப்புகளை ஆளத்தொடங்கியதன் பிறகே (இராசேந்திரச் சோழரின் காலம் தொட்டு) இவை தானவ நாடு என்று பெயர் பெற்றது.அதற்கு முன்னர் அம்பில் நாட்டோடு இணைந்து புன்றில் கூற்றத்திலேயே அடங்கியிருந்தது.


உள்ளடங்கும் ஊர்கள்;
                 
              வடகாடு,மாங்காடு,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,அணவயல்,கீழாத்தூர்,மேலாத்தூர்,  
புள்ளான்விடுதி,நெடுவாசல்,ஆவணம்,சேந்தன்குடி,நகரம்,வேம்பங்குடி,சித்தாதிக்காடு,சானாகரை,பைங்கால்,செரியளூர்,பனங்குளம்,மறமடக்கி,குளமங்கலம்,பாண்டிக்குடி,மேற்பணைக்காடு,கொடிக்கரம்பை,பட்டத்தூரணி,நெய்வத்தளி,கண்டியூர்(கல்வெட்டுக்களில் சோழசிகாமணிபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது,தற்பொழுது இவ்வூரின் நினைவாய்ச் சிறு சிவன் கோயில் மட்டுமே உள்ளது),செங்கமங்கலம்,அம்மையாண்டி,வீரராகவபுரம்,பஞ்சநதிபுரம்,ஏனதிகரம்பை,கரம்பக்காடு,செருவாவிதி,சித்துக்காடு,
திருச்சி்ற்பல்,,பொக்கன்விடுதி,களத்தூர்,கருக்காகுறிச்சி,பேராவூரணி,கடாரம் கொண்ட சோழபுரம் (தானம நாட்டின் தலைநகரம் இதுதான்,ஆனால் இப்பொழுது காணாமல் போய்விட்டது!)

அம்புலி ஆறு,வில்லுனி ஆறு,அக்கினி ஆறு போன்றவை இப்பகுதியில் உள்ள காட்டாறுகள் ஆகும்.இவற்றுள் அம்புலியாற்றை மையமாகக் கொண்டு வட தானமநாடு,தென் தானமநாடு என இப்பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.குறிப்பாக வடகாடு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பரப்புகள் வட தானமநாடு எனவும்,கொத்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பரப்புகள் தென் தானமநாடு எனவும் குறிக்கப் பெறுகின்றன.வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு அதாரமாக வட தானம நாட்டைச் சார்ந்த "வடகாடு" திகழ்கின்றது. வடகாட்டில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி அதை உறுதிபடுத்துகிறது.1981 ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வினை மேற்கொண்டு இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தனர்.
மேலும் தானம நாட்டின் தாய் கிராமமாக கொத்தமங்கலம் கிராமமே கருதப்படுகின்றது.இவ்வூரிலிருந்து பெறப்பட்ட 'கொத்தமங்கலம் செப்பேட்'டின் மூலமாகவே 'பதினோராம் நூற்றண்டு முதல் தானவ நாடு என்று அறியப்பட்ட இந்தப் பகுதி பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர் தானம நாடு-தானம வளநாடு (இன்றையச் சூழலில் தானாண்மைய நாடு) என்று பெயர் பெற்றதாக அறிந்துகொள்ள முடிகிறது'.

"விருதராச பயங்கர வளனாடாகிய,கானாடான,சிங்ககுலகாரானூர் நாடான ராசலெச்சனிக வளநாடான தானம வளநாடு" என்று தொடங்கும் இந்தச் செப்பேட்டை 15,16 ம் நூற்றாண்டுவாக்கில் இப்பகுதியை ஆண்டோரான "வாணதிராயர்கள்" என்போர் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த எட்டு கரைகாரர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைந்துள்ளது,அவர்கள் யாரெனில்

*மணவாளன் முத்திரியன்,
*கருவாண்டான் முத்திரியன்,
*நன்ன பெரியான் முத்திரியன்,
*வெள்ளியன் முத்திரியன்,
*சுண்டாங்கி முத்திரியன்,
*குளூனரி முத்திரியன்,
*கொங்குராயன் முத்திரியன்,
*சங்கர விசாலையன் முத்திரியன்...போன்றொராவர்.
ஆட்சி செலுத்திய மன்னவர்கள்;
குலோத்துங்கச் சோழ தானவதரையன் (எ) மதுராந்தகன் வாழவந்தப் பெருமான் (சோழருக்கு கட்டுப்பட்டு-முதலாம் இராசேந்திரச் சோழர் காலம் துவங்கி),
சுந்தர பாண்டியன் (எ) வாழவந்தப் பெருமான் (பண்டியர்களுக்கு கட்டுப்பட்டு-மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலம் துவங்கி),
வாழவந்தப் பெருமாள் (எ)காளிங்கராயா( வீரசேகர் எனும் பாண்டிய மன்னருக்கு(???) கட்டுப்பட்டு).
மேலும் பல மன்னர்களின் பெயர்கள் தெரியவில்லை,ஆனாலும் பதினெட்டாம் நூற்றாண்டுவரை தானவதரையர்,மதுராந்தகன்,வழவந்த பெருமாள் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்று இவர்களின் ஆட்சி தொடர்ந்தது. இவர்கள் சோழர்,பாண்டியர் போன்றோரின் மேலான்மையை ஏற்றிருந்தாலும் 'தமது பகுதியில் தான் வைத்ததே சட்டம்' என்கிற ரீதியில்தான் ஆண்டனர்.


விசயநகர மன்னர்கள் காலத்தில் சிதறுண்டுபோன தானமநாடு;

                      தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட விஜய நகர மன்னர்கள் கோதாவரிக் கரையிலிருந்து புறப்பட்டு வந்து,தமிழகத்தை வென்று,தமிழ் மன்னர்களைத் தமக்கு அடிமை ஆக்கினர்.அதுமுதல் தமிழ் மொழி சிதைவடைந்து,தமிழர்களின் பழம்பெரும் பண்பாட்டு நெறிமுறைகள் ஓரம் கட்டப்பட்டு,முன்னைத் தமிழ் மன்னர்கள் அக்கியிருந்த கட்டமைப்புகளும் சிதறுண்டுபோனது...தமிழ்நாடே ஆட்டம் கண்டதன் பிறகு தானம நாடு மட்டும் தப்புமா என்ன?!. வட தானம நாடு புதுகை தொண்டைமான்(கள்ளர்) மன்னர்களுக்கும்,தென் தானமநாடு சேதுபதி மன்னர்களால் தஞ்சை மராட்டியரிடத்திலும் ஒப்படைக்கப்பட்டது.இதில் குறிப்பிடத்தக்க விடயம் தென் தானமநாட்டின் "சேந்தன்குடி" தலைமையில் நாயக்கர்களால் புதியதொரு பாளையம் அமைக்கப்பட்டது. அதில் கொத்தமங்கலம்,குலமங்கலம்,பனங்குளம்,கீரமங்கலம்,நகரம் உள்ளிட்ட கிராமங்கள் இணைக்கப்பட்டன.இந்த ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பாளையத்தின் தலைவராக-பாளையக்காரராக- நியமிக்கப்பட்டோர் "வழுவாட்டித் தேவர்" என்ற பட்டமுடையோர்...


நம்முன் நிற்கும் கேள்விகள்...!!!
தானமர் என்னும் அரையர் எந்த இனக்குழுவைச் சார்ந்தோர்?
அவருக்கு முன்னமே வெள்ளாற்றுப் படுக்கையை ஆண்ட அரையர்கள் யாராக இருக்க முடியும்?
வாணவரையர்கள் முத்தரையர்களா?
வழுவாட்டித் தேவர் என்போர் யார்?அவர்கள் தேவர் பட்டம் பூண்டதின் காரணம் என்ன?
தாங்கள் தனித்துவம் கொண்டோர் என்று இன்றைக்கும் சொல்லிக் கொள்ளுகின்ற தானம நாட்டு அம்பலகாரர்களின் தனித்துவக் குணங்கள் யாது?
அம்பு நாட்டு வலையர்களுக்கும் தானம நாட்டு அம்பலகாரர்களுக்கும் என்ன ஒற்றுமை?


அடுத்த பதிவில் தொடரும்....

குறிப்புதவி நூல்கள்;
அ.சந்திரபொஸ் அவர்களின் "தானவ நாட்டு வரலாறு",
"புதுக்கோட்டை வரலாறு" .